குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஷவர்தன் சாலா என்ற பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் 14 வயது சிறுவனின் கண்டுபிடிப்பு அமெரிக்காவை வியக்க வைத்துள்ளது. கண்டுபிடிப்பை கண்டு வியந்ததோடு நின்றுவிடாமல் அந்த கண்டுபிடிப்பை தங்கள் நாடு பயன்படுத்தி கொள்ளும் விதத்தில் 730,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தத்தை இந்திய அரசாங்கத்தோடு அமெரிக்க அரசு ஏற்படுத்தி கொண்டுள்ளது.
இவரது கண்டுபிடிப்பான பறக்கும் டிரோன் நிலத்தில் புதைத்து வைக்கபட்டிருக்கும் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அவைகளை செயலிழக்க செய்து விடுகிறது. இவரது இந்த கண்டுபிடிப்பின் மூலம் போர்களங்களில் எண்ணற்ற உயிர்கள் பலியாவதை தடுத்து குண்டுவெடிப்பில் இருந்து காப்பாற்ற முடியும். தற்போது ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் வெடிகுண்டு செயல் இழக்க செய்ய பயன்பட்டு வரும் கருவிகளை விட இது மிக சிறந்ததாக உள்ளது.
இவர் உருவாக்கியுள்ள இந்த கருவியில் ஒரு அகச்சிவப்பு சென்சாரும், ஒரு வெப்பமானியும், ஒரு RGB சென்சாரும், ஒரு 21 மெகாபிக்சல் கேமராவும், வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் 50 கிராம் எடையுள்ள டெட்டனேட்டரும் பொருத்தபட்டுள்ளது. ரிமோட் மூலம் கட்டுபடுத்தகூடிய இந்த டிரோன் போர்க்களங்களில் பறந்து சென்று வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதோடு அவைகளை செயலிழக்கவும் செய்கிறது.
குண்டுவெடிப்புகளால் எண்ணற்ற உயிர்கள் பலியாவதை தடுக்க விரும்பி முதலில் இவர் சோதனை முறையில் இவர் மூன்று (PROTOTYPE) டிரோன்களை உருவாக்கி அதை குஜராத் அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையிடம் சமர்ப்பித்து, அந்த துறையிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி பெற்று ஏரோபாடிக்ஸ் 7 டெக் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி இவர் இந்த வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் உயிர் காக்கும் டிரோனை உருவாக்கி உள்ளார்.
முதலில் இவர் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் ரோபோவை தான் உருவாக்கி உள்ளார், ஆனால் அந்த ரோபோவின் எடை அதிகமாக இருந்ததன் காரணமாக அதை பயன்படுத்தும் போதே வெடிகுண்டுகள் வெடிக்க கூடிய அபாயம் அதிகமாக இருந்ததால், பின்பு எடை மிக குறைவாகவும் தூரத்தில் பறந்தபடியே வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க கூடிய பறக்கும் டிரோனை உருவாக்கியுள்ளார். இவரது இந்த கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சிக்காக அரசாங்க உதவி தொகையை பெறுவதற்கு முன் கணக்காளராக வேலை பார்த்து வரும் இவரது தந்தையும் ரூபாய் 2 லட்சம் கொடுத்து தன் மகனுக்கு ஆராய்ச்சியை நடத்துவதற்கு ஊக்கம் கொடுத்துள்ளார்.